க்ரைம்

சேலத்தில் லாரி மற்றும் ரயிலில் கடத்த முயன்ற 207 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் லாரி மற்றும் ரயிலில் கடத்த முயன்ற 207 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்தனர்.

சேலம் அருகேயுள்ள குப்பனூர் பகுதியில் நேற்று அதிகாலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர்.

இதில், லாரியில் இரும்பு கம்பிகளுக்கு இடையே 200 கிலோ கஞ்சா பண்டல் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, லாரியுடன் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலத்துக்கு கஞ்சா பண்டல்கள் கடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த முருகன் மற்றும் முசிறியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரிந்து இருவரையும் கைது செய்தனர்.

ரயிலில் 7 கிலோ பறிமுதல்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்- கேரள மாநிலம் ஆலப்புழா விரைவு ரயிலில் சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை சோதனையிட்டனர்.

அப்போது, ஒடிசா மாநிலம் பிஸ்லாபூர் பகுதியைச் சேர்ந்த பகுபதி பசன்மகட் (25), கார்டிக்பகி (20) ஆகிய இருவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தபோது, அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT