க்ரைம்

சென்னிமலையில் செல்போன் டவர் மாயம்: போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை

செய்திப்பிரிவு

ஈரோடு: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவில், திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (49). இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் பதிவு பெற்று, நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து, அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பள்ளக்காட்டு தோட்டத்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில், செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.31 லட்சமாகும்.

இதுகுறித்து கோசல் குமார், ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT