க்ரைம்

புதுச்சேரி | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு பத்து ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டுநெட்டப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றபோது, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெட்டபாக்கம் போலீஸில் புகார் பெறப்பட்டது. அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 366 பிரிவின் கீழ் (கடத்தல்) 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 342 பிரிவின் கீழ் (அடைத்து வைத்தல்) 6 மாத சிறை தண்டனையும், 506 (2) பிரிவின் கீழ் (கொலை மிரட்டல்) 3 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு (பிரிவு 6-ன் கீழ் பாலியல் வன்கொடுமை) 10 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு(பிரிவு10-ன் கீழ் பாலியல் துன்புறுத் தல்) 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏககாலத்தில் (மொத்தமாக பத்து ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். அதேபோல் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT