க்ரைம்

திருநெல்வேலி | நகை, பணம் பறிக்க முயன்ற 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அரியகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(39). இவர், பாளையங்கோட்டை மார்க்கெட் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 பேர் அரிவாளைக் காட்டி மிரட்டி, மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன் (21), பாளையங்கோட்டை உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம் குமார் (22) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து, இந்த 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல், சிவராஜபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவரிடம், அந்த வழியாக வந்த இளைஞர் நகையை பறிக்க முயன்றார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், சீவலப்பேரியைச் சேர்ந்த பிரேம் (26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT