பெரியகுளத்தைச் சேர்ந்தவரிடம் சமூக வலைதளம் மூலம் நூதன முறையில் ரூ.36 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இத்தாலியில் உள்ள கப்பலில் சமையலராகப் பணிபுரிந்து வருகிறார்.
முகநூலில் இவரைத் தொடர்பு கொண்ட எமிலி ஜோன்ஸ் என் பவர் தனது வாட்ஸ்அப் எண் ணை கொடுத்துள்ளார். அதில் முருகானந்தம் தொடர்பு கொண்ட போது, நான் சிரியா ராணுவத்தில் நர்ஸாக பணிபுரிகிறேன். இங்குள்ள கலவரக்காரர்களிடம் இருந்து பெரும்தொகை கைப் பற்றப்பட்டுள்ளது. அதை ராணுவத்தினர் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்படி எனது பங்காக ரூ.15.5 கோடி வர உள்ளது. இதை பாதுகாப்பாக வைத்திருந்தால் 30 சதவீதம் கமிஷன் தொகை தருவதாகவும், பணத்தை பார்சலில் அனுப்புவதாகவும் எமிலி ஜோன்ஸ் கூறியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட முருகானந்தம், தனது முகவ ரியை கொடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பின்பு டெல்லி விமான நிலையத்திலிருந்து பேசுவதுபோல ஒருவர் மொபைல் போனில் பேசியுள்ளார். எமிலி ஜோன்ஸ் பார்சல் அனுப்பி இருப்பதாகவும், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய முருகானந்தம் ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்தை வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து விமான நிலைய நடைமுறைகள் குறித்து ஒவ்வொன்றாகக் கூறி, மொத்தம் ரூ.36 லட்சத்து 31 ஆயிரத்தைப் பெற்றுள்ளார்.
அதன் பின்பும் பணத்தை அனுப்புமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகானந்தம் தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.