க்ரைம்

திருப்பத்தூர் | குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: குடும்பத்தகராறில் திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பத்துார் மாவட்டம் ஆதியூர் கிராமம் ஆலமரத்து வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி சக்கரவர்த்தி (25). இவரும், காக்கங்கரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் என்பவரின் மகள் கீர்த்திகா(20) என்பவரும், கடந்த 7 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கீர்த்திகா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் கீர்த்திகாவின் தந்தை பிரகாசம் புகார் அளித்தார். அதன்பேரில், கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சக்கரவர்த்தி - கீர்த்திகா திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் வழக்கை திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியருக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT