ஜோலார்பேட்டை: ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின்படி, ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் நேற்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காக்கி நாடாவில் இருந்து பெங்களூரு வரை செல்லும் விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 1-வது நடைமேடைக்கு வந்தடைந்தது.
அந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை மேற்கொண்டதில், ஜிஎஸ் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரின்றி கிடந்த பெரிய பையை மீட்டு சோதனை செய்தனர். அதில் 7 பண்டல்களில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த பையை மீட்ட ரயில்வே பாதுகாப்புப்படையினர், அதிலிருந்த 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போதை தடுப்புப் பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரயில் மூலம் கஞ்சா கடத்தும் மர்ம நபர்கள் யாரென்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.