திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேகாம்பாளையத்திலுள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கணித ஆசிரியராக செந்தாமரைக்கண்ணன்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், 9-ம் வகுப்பு மாணவியிடம் நேற்று முன்தினம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்புடைய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பல்லடம் வட்டார கல்வி அலுவலர் ஆனந்தி அளித்தபுகாரின்பேரில், பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் பள்ளியில் உள்ள 9-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை அறிக்கை, மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்விக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.