சென்னை: விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த ரயில் பயணியிடம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
மேலும், அவரிடம் இருந்த பையில் ரூ.46 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், அவர் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி(56) என்பதும், நகை வியாபாரி என்பதும் தெரியவந்தது.
வேலூரில் உள்ள நாராயணன் என்பவரது நகைக் கடைக்கு, ரவி நகைகளை விற்பனை செய்துள்ளார். அதற்குண்டான தொகையான ரூ.46 லட்சத்தை, விஜயவாடா சென்று வாங்கி வந்ததாக ரவி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தப் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.46 லட்சம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.