சிவகங்கை: சிவகங்கை ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ஜீன்ஸ் பேண்ட், பட்டுச் சேலைகள் திருடப்பட்டன.
சிவகங்கை காஞ்சிரங்கால் மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் சக்திமுருகன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து ஜீன்ஸ் பேன்ட்கள், சட்டைகள், பட்டுப்புடவைகள் மற்றும் ரொக்கம் ரூ.1000-ஐ திருடிச் சென்றனர். நேற்று காலை கடையின் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
உரிமையாளர் புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். திருடப்பட்ட துணிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் வரை இருக்கும் என உரிமையாளர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நகைகள், ரொக்கம் திருடப்பட்டு வந்த நிலையில், தற்போது துணிகளை திருடுவதும் அதிகரித்துள்ளது.