காரைக்குடி: காரைக்குடியில் 5 பட்டுச் சேலைகளுடன் போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார்.
காரைக்குடி என்ஜிஓ காலனியில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கைப்பையுடன் நடந்து வந்துள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் காரைக்குடி கணேச புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடச் சென்றுள்ளார். அங்கு பணம், நகைகள் கிடைக்காததால், பீரோவில் இருந்த 5 பட்டுச் சேலைகளை மட்டும் திருடி வந்துள்ளார்.
மேலும் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து புராஜெக்டர் ஒன்றையும், சில மாதங்களுக்கு முன்பு சூடாமணிபுரத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்தனர்.