திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையில் ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தி.மலை அடுத்த கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் விற்பனை முடிந்ததும், கடந்த 10-ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது நேற்று முன்தினம் காலை தெரியவந்தது. கடையின் உள்ளே மதுபாட்டில்கள் சிதறி கிடந்தன.
இதையடுத்து, மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன், மதுபாட்டில்கள் இருப்பை சரி பார்த்தபோது ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.