தஞ்சாவூர் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீதுவிரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கும்பகோணம் அருகே ஆரியபடை வீடு கிராமத்தைச் சேரந்த மாசிலாமணி என்பவரது மனைவி சந்தானதேவி(38) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த க.அய்யப்பன்(45) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றிருந்தார். அதற்கு வட்டியாக ரூ.60 ஆயிரம் செலுத்திய நிலையில், அய்யப்பன், சந்தானதேவியிடம் கூடுதலாக கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, சந்தானதேவி பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி அளித்த புகாரையடுத்து, கந்து வட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் அய்யப்பனை கைது செய்தனர்.
இதேபோல, தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை என்ஜிஓ நகரைச் சேர்ந்த உமா(44) என்பவர், மாதாகோட்டை வெற்றி நகரைச் சேர்ந்த மல்லிகா(34) என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதற்கு ரூ.60 ஆயிரம் வட்டி செலுத்திய நிலையில், மேலும் கந்து வட்டி கேட்டு உமாவை மல்லிகா மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார், மல்லிகா மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் ஒருவர் கைது
மயிலாடுதுறை அருகேயுள்ள நல்லத்துக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(47). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை காமராஜர் தெருவைச் சேர்ந்த ஜவகர்(40) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கி உள்ளார். பணம் வாங்கிய சில மாதங்கள் வரை வட்டித்தொகையை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து, கரோனா ஊரடங்கு சூழல் காரணமாகவும், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும் செல்வம் வட்டித் தொகையை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வம் வீட்டுக்குச் சென்ற ஜவகர் வட்டியுடன் பணத்தை உடனே தரவேண்டும் என்று கேட்டதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார், கந்து வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜவகரை கைது செய்தனர்.