அரியலூர்: அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பின் தகவல்: அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவா (28). இவர் அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மாமன் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவாவின் காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அஜித்குமாரின் வீட்டிற்கு அருகே சிவா தகராறில் ஈடுபட்டுள்ளார். அஜித்குமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி ஆகியோர் சிவாவிடம் “ஏன் சத்தம் போடுகிறாய்?” என கேட்டுள்ளனர். இதனால் மூவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சிவா அங்கு கிடைந்த கட்டையால் முத்துபாண்டி மற்றும் அஜித்குமாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முத்துப்பாண்டி மேல் சிகிச்சைகாக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜெயங்கொண்டம் போலீஸார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.