அரியலூர்: அரியலூரில் விவசாய கிணற்றுக்குள் பெண் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கராஜன். இவரது வயலில் உள்ள கிணற்றுக்குள் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாக அரியலூர் தீயணைப்புத் துறையினருக்கு இன்று (ஜூன் 11) காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி பார்த்தபோது துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் கிணற்றிலிருந்த சாக்கு மூட்டையை வெளியே கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் சாக்கு மூட்டையினுள் பார்த்தபோது பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கீழப்பழுவூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெண்ணின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து ஒரு வாரமாவது இருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.