உதகை: திண்டுக்கல் மாவட்டம் என்ஜிஒ காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டீஸ்வரி (25). இவரது கணவர் வினித் பாலாஜி ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்.
இவர்களுக்கு கடந்த 13.06.2021 அன்று திருமணம் நடைபெற்றது. உதகை ஆயுதப் படை காவலராக வினித் பாலாஜி பணிபுரிவதால், காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை முத்துபாண்டீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திண்டுக்கல்லில் உள்ள அவரது பெற்றோருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.திண்டுக்கல்லில் இருந்து உதகைக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட உறவினர்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.உறவினர்கள் கூறும்போது, ‘‘வரதட்சணை கேட்டு வினித்பாலாஜி துன்புறுத்துவதாகவும், தன்னை அழைத்துச்செல்லுமாறும் செல்போனில் பெற்றோரை தொடர்பு கொண்டு முத்து பாண்டீஸ்வரி முறையிட்டுள்ளார்.
எனவே, முத்துப்பாண்டீஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. வினித் பாலாஜியை கைது செய்யவேண்டும்’’ என்றனர். உடற்கூறு ஆய்வறிக்கை விவரங்கள் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. முத்துபாண்டீஸ்வரி தற்கொலை தொடர்பாக, உதகை கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.