வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பீடி, புகையிலை, சிகரெட், செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சிறைக்காவலர்கள் சிறை வளாகம் மற்றும் கழிவறை பகுதிகளில் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 7-வது பகுதியில் உள்ள கழிவறை பகுதிகளில் செல்போன், சிம்கார்டு, பேட்டரி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இவற்றை பயன்படுத்திய கைதி யாரென்பது குறித்து சிறைக்காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஜெயிலர் மோகன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.