கோவை/திருப்பூர்: கோவை சூலூர் கருப்பண்ணன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், திருமண ஆசைகாட்டி பிரகாஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமி கர்ப்பமானதைத்தொடர்ந்து, மாத்திரை மூலம் பிரகாஷ் கருவை கலைக்கச் செய்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுமி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2018 ஜனவரி 18-ம் தேதி புகார் அளித்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் (போக்ஸோ) வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிரகாஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பிரகாஷூக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார்.
திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு, பாரதி நகரைச் சேர்ந்த சரவணன் (50) பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 2020-ம் ஆண்டு சரவணன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சரவணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.
இதேபோல, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு, அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் (45) பாலியல் தொந்தரவு அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த ஆண்டு வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேஷை கைது செய்தனர். இவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.