ஓசூர்: ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை பெற்று விற்பனை செய்த வழக்கில்மேலும் சில மருத்துவமனைகளில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக, ஓசூரில் உயர்மட்ட மருத்துவக் குழு தலைவர் விஸ்வநாதன் கூறினார்.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்தது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விஸ்வநாதன், கோமதி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், ஈரோட்டில் காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இந்தக் குழுவினர் ஈரோடு, பெருந்துறை மற்றும் சேலத்தில் தனியார் மருத்துவமனகளில் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்தினர்.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் இணை இயக்குநர் விஸ்வநாதன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சிறுமி அளித்த தகவலின்படி குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்த்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் சில மருத்துவமனைகளில் உள்ள ஆவணங்களை சோதனையிட வேண்டி உள்ளது. பிற மாநிலங்களில் கருமுட்டை விற்பனை செய்தது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.