க்ரைம்

சென்னை | கைதி உயிரிழந்த வழக்கில் 5 போலீஸாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: காவல் நிலையத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீஸாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக காலனி போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் அன்றிரவே விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

போலீஸார் லத்தியால் கொடூரமாக தாக்கியதில் விக்னேஷ் இறந்தது தெரியவந்ததால் முதல்நிலை காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிசிஜடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT