மதுரை: மதுரை அருகே தனியார் பேருந்தை வழிமறித்து, கத்தி முனையில் நடத்துநரிடம் பணப்பையை பறித்து சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பேரையூர் அருகிலுள்ள சூலபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராஜ். மினி பேருந்து நடத்துநராக உள்ளார். கடந்த 5-ம் தேதி ஆண்டார் கொட்டாரம்- சக்கிமங்கலம் நோக்கி பஸ் சென்றபோது கல்மேடு பகுதியில் இருவர் பேருந்தை வழி மறித்தனர்.
அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பஸ்ஸில் ஏறி நடத்துநரை மிரட்டி பணப்பையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் கருப்பாயூரணி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் ஆண்டார்கொட்டாரம் தர்மா என்ற கோட்சா (23), ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் தர்மா கைது செய்யப்பட்டார். ரமேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஓடும் பேருந்தை வழிமறித்து கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். தர்மா மீது சிலைமான், அண்ணாநகர், கருப்பாயூரணி காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் கூறினர்.