நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தறிப்பட்டறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 மூட்டை குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்ததுடன் தறிப்பட்டறை உரிமையாளர் உள்பட இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி ஊராட்சி முத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது தறிப்பட்டறையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன், உதவி ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான காவல் துறையினர் கந்தசாமி பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 18 மூட்டை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குட்கா மூட்டைகள் அனைத்தும் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு கந்தசாமி பட்டறையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 240 கிலோ எடை கொண்ட குட்கா மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தறிப்பட்டறை உரிமையாளர் கந்தசாமி, பதுக்கலுக்கு உடந்தையாக செயல்பட்ட தேவராசு ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மொத்த வியாபாரிகள் 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று திருச்செங்கோடு காவல் துறையினர் தெரிவித்தனர்.