மதுரை: மதுரை அடகு கடையில் லாக் கரை திருடிய கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றது.
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த வைத்தியநாதன், பாரதியார் சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் லாக்கரில் இருந்த நகையைத் திருட முயற்சி செய்தது.
லாக்கரை உடைக்க முடியாததால் அதை சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று காலை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி, முத்து ஆகியோர் குப்பைத் தொட்டியில் லாக்கர் இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். புதூர் போலீஸார் லாக்கரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.