ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்த வந்த உயர்மட்ட மருத்துவக் குழுவினர். படம்: எஸ்.குரு பிரசாத். 
க்ரைம்

ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற திட்டம்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்திய உயர்மட்டக் குழுவினர், விரைவில் ஓசூரிலும் விசாரணை நடத்த உள்ளனர். சிறுமியை வெளிமாநில மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த தாய் உட்பட 4 பேரை ஈரோடு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 தனியார் மருத்துவமனைகளில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விஸ்வநாதன், கோமதி (ஈரோடு), மருத்துவர்கள் மலர்விழி, கதிரவன் மற்றும் கமலக்கண்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஈரோட்டில் காப்பகத்தில் உள்ள சிறுமியிடமும் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன், விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி கனகேஸ்வரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது கருமுட்டைகள் விற்பனை குறித்து போலீஸார் நடத்திய விசாரணைத் தகவல்கள், மருத்துவக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில மருத்துவமனைகள்

இதனைத் தொடர்ந்து சேலம் சென்ற மருத்துவக் குழுவினர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாதிப்புக்குள்ளான சிறுமியிடம் உயர்மட்டக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கருமுட்டைகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் விதிமுறைகளைப் பின்பற்றி கருமுட்டை தானம் பெற்றார்களா, கருமுட்டை தானம் பெற்றதற்கான பதிவுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா, தானம் அளிப்பவர்களின் வயது குறித்த சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதா, பாதிக்கப்பட்ட சிறுமி எத்தனை முறை மருத்துவமனைக்கு வந்து சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்போது, மருத்துவமனைகளின் மீதான நடவடிக்கை தெரியவரும் என்றனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் ஈரோடு மட்டுமல்லாது, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT