ஈரோடு: ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக, சுகாதாரத்துறையின் உயர்மட்ட மருத்துவக்குழுவினர் தனியார் மருத்துவமனைகளில் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த தாய் சுமையா, அவரது இரண்டாவது கணவர் சையது அலி, இடைத்தரகர் மாலதி ஆகியோர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறுமியின் வயதை அதிகப்படுத்தி காட்டும் வகையில், போலியாக ஆதார் கார்டு தயாரித்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஈரோடு கூடுதல்டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கருமுட்டைகளை விலை கொடுத்து வாங்கிய ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீஸார், அவர்களை ஏடிஎஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத் துறைசார்பில் மருத்துவர்கள் அடங்கியஉயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் விஸ்வநாதன், கமலக்கண்ணன், ஈரோடு மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநர் கோமதி, மகப்பேறு மருத்துவர் மலர்விழி, கதிரவன் உள்ளிட்டோர் நேற்று ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 தனியார் மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு அரசுகாப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து உயர்மட்ட மருத்துவக் குழுவினர் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தோம். அவர் நலமாக உள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான 2 மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகங்கள் தவறு செய்திருந்தால், அதன் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றனர்.