க்ரைம்

பாணாவரம் அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

செய்திப்பிரிவு

அரக்கோணம்: பாணாவரம் அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சேட்டு (48). இவரது மனைவி சுதா (43). இவர்கள் 2 பேரும் புழுக்கம் காரணமாக வீட்டை வெளிப்பக்க மாக பூட்டிக்கொண்டு வீட்டின் வெளியே காற்றோட்டமாக படுத்து உறங்கினர்.

அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் உள்ளே சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

பக்கத்து வீட்டிலும் முயற்சி

அப்போது, பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டு அந்த வீட்டின் உரிமையாளர் ஜெயபிரகாஷ் எழுந்துபார்த்த போது, அங்கிருந்த சிலர் வெளியே தப்பியோடினர்.

சேட்டு வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் ஜெயபிரகாஷ் வீட்டிலும் நுழைந்து அங்கு திருட முயற்சி செய்துள்ளனர். ஜெயபிரகாஷ் சத்தம் கேட்டு எழுந்ததால் அவரது வீட்டில் எந்த பொருள் திருடு போகவில்லை.

இது குறித்து பாணாவரம் காவல் நிலையத்தில் சேட்டு புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT