க்ரைம்

சென்னையில் 5 மாதத்தில் 148 பேருக்கு குண்டர் சிறை

செய்திப்பிரிவு

சென்னை: திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் உட்பட சென்னையில் கடந்த 5 மாதங்களில் 148 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் திமுகவின் 188-வது வட்ட செயலாளராக இருந்த மடிப்பாக்கம் செல்வம் கூலிப்படை மூலம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயமுருகன் (42), குட்டி என்ற உமா மகேஸ்வரன் (43), ரவி என்ற ரமேஷ் (39), சகாய டென்சி (55), முத்துசரவணன் (31), மணிகண்டன் (32), தணிகாசலம் (33), கவுதமன் (45), சதீஷ்குமார் (34) ஆகிய 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபட்டவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், போதைப் பொருட்களை கடத்தியவர்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறித்தவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவுப் பொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என கடந்த 01.01.2022 முதல் 03.06.2022 வரை 148 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 100 பேர்; திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 33 பேர்; கஞ்சா விற்பனை செய்த 9 பேர்; பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 பேர்; பெண்களை மானபங்கம் செய்த 2 பேர்; சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் உட்பட மொத்தம் 148 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT