அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கச்சி பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன்(28). இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேர் உள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தா.பழூர் அருகேயுள்ள கிராமத்துக்குச் சென்ற மணிகண்டன், அங்கிருந்த 14 வயது சிறுமியை தனது இரு சக்கர வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அந்தச் சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், மணிகண்டன் தப்பிவிட்டார். இதையடுத்து, கிராமத்தினர் அந்தச் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு மணிகண்டனைக் கைது செய்தனர்.