க்ரைம்

போளூர் அருகே 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: போளூர் அருகே 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொள்ளமேடு குப்பம் கிராமத்தில் வசிப்பவர் தொழிலாளி பூபாலன்(40). இவர், அதே பகுதியில் உள்ள 6 மற்றும் 8 வயது உள்ள சிறுமிகளை கடந்த 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகளிடம் விசாரணை நிறைவு பெற்றது.

இதையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பூபாலனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பளித்தார்.

சிறையில் அடைப்பு

மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மத்திய சிறையில் பூபாலன் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT