திருப்பூர்: திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநகர போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபர், தண்ணீர் இல்லாத கிணற்றில் சடலமாக இன்று மீட்கப்பட்டார்.
திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வாடகை வீட்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பூமாரி (35) மற்றும் அவரது மகன்கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில் பூமாரி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கணவரை பிரிந்து பூமாரி வாழ்ந்து வந்தார். அவரது வீட்டில் திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த கடந்த 22-ம் தேதி காலை பூமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் திருமுருகன்பூண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்தில் போலீஸார் பார்வையிட்ட போது, பூமாரி மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரும் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் உடன் தங்கியிருந்த மர்ம நபர் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
கொலையாளியை கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபுவின் உத்தரவின் பேரில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடி வந்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்தி (50) என்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கோபால் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தது,கையில் இருந்த அலைபேசியை பயன்படுத்தாமல் இருந்தது, பூமாரியின் அலைபேசியை பயன்படுத்தாமல் இருந்தது மற்றும் மிதிவண்டியில் சுற்றியதால் போலீஸாருக்கு பெரும் சிரமம் எழுந்தது.
இந்நிலையில், காங்கேயம் படியூர் அருகே நல்லிபாளையத்தில் உள்ள துளசி தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் மிதிவண்டியுடன் ஒருவர் சடலமாக கிடப்பதாக காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரித்தனர். மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அதில் பூமாரி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொன்ற நபர் என்பது தெரியவந்தது. அழுகிய நிலையில் தலையில் தொப்பியும், முகக் கவசம் அணிந்த படி இருந்த சடலத்தை, காங்கயம் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து உடலை கைப்பற்றிய காங்கயம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கிணற்றுக்குள் அலைபேசி, டார்ச் லைட், மிதிவண்டி, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். போலீஸார் தேடுவதை அறிந்த கோபால், பயத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 22-ம் தேதி, இரவு ஏற்பட்ட பிரச்சினையில் மூவரையும் கொலை செய்தவர், அங்கிருந்து மிதிவண்டி மூலமாக தப்பி சென்றுள்ளார். படியூரில் 2 இடங்களில் அவரது உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கொலை செய்யப்பட்ட பிறகு, அலைபேசியை ஆன் செய்யவில்லை. இந்த நிலையில் போலீஸார் தேடுவதை அறிந்து, ஒரு வாரத்துக்கு முன்பே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றனர்.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு கூறும்போது, ''கொலையாளி ஏற்கெனவே பெருந்துறையில் திருமணமான பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்து 7 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அதன்பின்னர் 2020-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர், யாரிடம் எவ்வித ஆவணங்களும் தராத இடங்களில் வேலை செய்து வந்தார். முதல் பெண் அலைபேசியில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதில் கொலைக்கான காரணம் தெரியவில்லை. குஜராத்தில் இருந்து திருப்பூர் வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருவதாக பணியாற்றும் இடங்களில் கோபால் (எ) கார்த்திக் தெரிவித்துள்ளார்'' என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.