தஞ்சாவூர்: நகை மொத்த வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 200 கிராம் தங்க நகைகள் மற்றும் 14 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த மணி என்ற நகை மொத்த வியாபாரி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னையில் இருந்து தங்க நகைகளுடன் தஞ்சை வந்து பல்வேறு கடைகளுக்கும் சென்று நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்னை செல்வதற்கு முன் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார்.
அப்போது உணவு வாங்குவதற்காக அவரது நகை பையை கீழே வைத்து விட்டு, பணம் கொடுத்துவிட்டு மீண்டும் பையை தேடிய போது அவரது நகைப் பையை காணவில்லை. கடை முழுவதும் தேடினார். பை கிடைக்காததால் இதுகுறித்து உடனடியாக மேற்கு காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மணி ஒவ்வொரு நகை கடைக்கும் சென்றபோது அவரை ஒரே நிறத்தில் சட்டை அணிதிருந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் உணவகத்திலும் அவரை திசை திருப்பும் நோக்கில் அவரை சுற்றி ஒன்பது பேரும் நின்றிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஒன்பது பேர் கொண்ட குழு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை காவல்துறை தேடிவருகின்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள தஞ்சை பேருந்து நிலையம் அருகே நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.