க்ரைம்

வேலூர் | நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி அபகரிப்பு

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம் (25). இவர், ஒடுக்கத்தூர் பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் நகைக்கடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 பேர் நகை வாங்க வந்துள்ளதாகக் கூறி 3 முதல் 5 பவுன் எடையுள்ள நகையை காண்பிக்குமாறு கேட்டனர். இதை நம்பிய மரகதம் தங்க சங்கிலியை அவர்களிடம் காண்பித்தார்.

அப்போது, வந்த 2 பேரில் ஒருவர் மரகதம் கையில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோ டினார். அவருடன் வந்த மற்றொரு வரும் அங்கிருந்து தப்பியோடினார். உடனே, கடையில் இருந்த ஊழியர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று ஒருவரை பிடித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த சாதிக்(32) என்பதும், அவருடன் வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த முபாரக் (29) என்பது தெரியவந்தது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்வா கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சாதிக்கை கைது செய்தனர். தப்பியோடிய முபாரக்கை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT