க்ரைம்

ஓசூரில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது: ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் 3 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியில் உள்ள வீட்டில் அட்கோ போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர் சிவபாண்டி (36), சரவணன் என்கிற சங்கர் (34), சின்னதம்பி, கருப்புப்பாண்டி (22) மற்றும் அவர்களை அழைத்து வந்த ஓசூர் மோகன் (34) ஆகிய 5 பேர் ஆயுதங்களுடன் தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த அறிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஓசூருக்கு வந்த காரணம் தொடர்பாக 3 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 லட்சம் பறிப்பு

அஞ்செட்டி மாரட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கோபராவ் (44). இவர் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அஞ்செட்டி அடுத்த மலிதிக்கி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (35), ஏரிகோடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (30), பாண்டுரங்கன் தொட்டியைச் சேர்ந்த சக்தி (28) ஆகியோர் வெங்கோபராவை காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர் அஞ்செட்டி காட்டுப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். வெங்கோபராவின் உறவினர் மூலம் ரூ.10 லட்சம் பெற்ற பின்னர் அவரை விடுவித்தனர்.

இதுதொடர்பாக அஞ்செட்டி போலீஸார் விசாரணை நடத்தி, கணேசன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT