சென்னை: சகோதரர்கள் இருவரை கொலை செய்ய, வீட்டில் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை கொரட்டூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், மாதனாங்குப்பம், பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீஸாருக்கு நேற்று அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கிருந்த ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (27), மாதனாங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் (26), அம்பத்தூரை அடுத்தபுத்தகரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (20), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (29), ஐசக்ராபர்ட் (19), பெரம்பூர் ஈசாக் (22), திருமுல்லைவாயல் கிருஷ்ணகுமார் (19) ஆகிய 7 பேரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் போலீஸார் அவர்களைகாவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆவடியைசேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பெரம்பூரில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்ஸர் விக்கி (30), அவரது தம்பி சீனா (27) ஆகியோருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் இரவுபிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரையும் பாக்ஸர் விக்கி, சீனாதலைமையிலான 10 பேர் கொண்டகும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து பிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரின் தலைமையில் மாதனாங்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவரின் வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்து, விக்கி, சீனா ஆகிய இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்ததன் மூலம் 2 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அவர்களிடமிருந்து 7 கத்திகள், 5 இருசக்கர வாகனங்கள், 1.5 கிலோ கஞ்சா, 4 ஆசிட் பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். முதல்கட்டமாக பிடிபட்ட 7 பேரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.