கடலூர்: கடலூர் மாவட்ட குற்ற நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை ஓறையூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கும்,கடலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கும் தகவல் தந்தனர். புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,கடலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி,சப்-இன்ஸ் பெக்டர் கோபிநாத் மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த ஜாபர்சேட் (28), ஏழுமலை (36), ராஜலு (42) ஆகிய 3 பேர் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் லாரியுடன் 75 ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.