திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டத்தில் இன்று காலை வேகமாக சென்ற கார், சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், நிம்மனபல்லி ரெட்டிவாரி பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கங்கிரெட்டி, ஹேமலதா தம்பதியினர். இவர்கள் இன்று தங்களது 2 பிள்ளைகளான குஷி (9), தேவான்ஷ் (7) ஆகியோருடன் பலமநேரில் என்ற இடத்தில் நடைபெற்ற தங்களது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுள்ளனர்.
இன்று காலை திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், காரில் மீண்டும் புங்கனூர் வழியாக சொந்த ஊருக்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. மதனபள்ளி அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதிய ஏரிக்குள் பாய்ந்து தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த கங்கிரெட்டி, இவரது மனைவி ஹேமலதா, மகன்கள் குஷி மற்றும் தேவான்ஷ் ஆகிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து மதனபள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.