க்ரைம்

சென்னை | பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர் பணியிடை நீக்கம்; பாஜக பிரமுகர் கொலை: பரபரப்பு பின்னணி தகவல்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை யைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்தார். முன்விரோதம் காரணமாக அச்சுறுத் தல் இருந்ததால் கீழ்ப்பாக்கத்தில், மனைவி பிள்ளைகளுடன் வசித்துவந்தார். உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்ததால் பாலச்சந்தருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு நண்பர்களை சந்திப்பதற்காக பாலச்சந்தர் சிந்தாதிரிபேட்டைக்கு சென்றிருந்தார். அங்குள்ள சாமிநாயக்கன் தெருவில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

கொலை தகவல் அறிந்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடம் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொலையாளிகளை கைதுசெய்ய திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 20 குற்ற வழக்குகளில் தொடர்புள்ள முக்கிய ரவுடியான மோகன் என்ற தர்கா மோகனின் மகன்கள் பிரதீப்,சஞ்சய், கூட்டாளி கலைவாணனுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பாலசந்தரை கொலை செய்தது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கொலைக்கான பின்னணி

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாஜக பிரமுகரான பாலச்சந்தரின் பெரியம்மா மகன்கள் ரூபன் சக்கரவர்த்தி, தீபன் சக்கரவர்த்தி. ஆகியோர் சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை வைத்துள்ளனர். அவர்களிடம் தர்கா மோகனின் மகன் பிரதீப் மாமூல் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக ரூபன் சக்கரவர்த்தி, தீபன் சக்கரவர்த்தி இருவரும் தங்களது உறவினரான பாலச்சந்தரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலச்சந்தர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரதீப், சஞ்சய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், இவர்கள் பாலச்சந்தர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் கடந்த 14-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வசந்தா(25) என்பவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தர்கா மோகன் மீது புகார் ஒன்று அளித்திருந்தார். இந்த புகார் பின்னணியில் பாலச்சந்தர் இருப்பதாக தர்கா மோகனின் மகன்கள் நம்பினர். தொடர்ச்சியாக போலீஸில் புகார் தெரிவித்து தம்மை சிக்கவைப்பதாக எண்ணி கோபமடைந்த பிரதீப், சஞ்சய் இருவரும் சேர்ந்து பாலச்சந்தரை கொலை செய்துள்ளனர்.

கொலையான பாலச்சந்தர், கொலை நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தனது மெய்க்காப்பாளர் பாலமுருகனை, சிந்தாதிரிப்பேட்டை மங்கபதி நாயக்கன் தெருவில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்ட பாலச்சந்தர் அனுப்பியதாக மெய்க்காப்பாளர்் கூறினார். இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கிறோம்.

பாலச்சந்தரை கொலை செய்துவிட்டு, பெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமம், எம்ஜிஆர் தெருவில் உள்ள தனது மைத்துனர்கள் வீட்டுக்கு சென்று ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு, தண்ணீர் குடித்துவிட்டு பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம் என்றனர்.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி பிரதீப் மற்றும் கூட்டாளிகளால் பாலச்சந்தர் வெட்டப்பட்டதாக தெரிய வருகிறது. புலன்விசாரணையில் பல புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் அதை தவிர்த்து அவர் தனியே சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

SCROLL FOR NEXT