மேல் படம் : விஜய் - லட்சுமி தம்பதி | கீழ் படம் : சூர்யா- பாரதி தம்பதி 
க்ரைம்

12 மாவட்டங்களில் கொள்ளை: தெலங்கானாவை சேர்ந்த 3 தம்பதியினர் ஈரோட்டில் கைது

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதியரை கைது செய்து ஈரோடு போலீஸார், அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மற்றும் ரூ 75 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட மூலப்பாளையம், ரங்கம்பாளையம், கேகே நகர், திண்டல், ரகுபதி நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆளில்லாத வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்த நிலையில், ஈரோடு எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ரோந்துப் பணியினைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு ரங்கம்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடி கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தெலங்கானா மாநிலத்தை 3 தம்பதினர் கூட்டாக சேர்ந்து தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, ரூ 75 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு போலீஸார் கூறியதாவது: "தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா(24)- பாரதி (22), மணி (38) - மீனா (26), விஜய் (42) - லட்சுமி (26) தம்பதியினர் ஈரோடு தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, வியாபாரிகள் போலவும், பிச்சை எடுப்பது போலவும் நடமாடி, ஆளிள்ளாத வீடுகளை நோட்டமிடுவர். அதன்பின், இரவு நேரத்தில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்களது குழந்தைகளையும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்." என்று போலீஸார் கூறினர்.

மணி - மீனா தம்பதி

கொள்ளையர்கள் குறித்து ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் கூறியதாவது: "ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதியர்களை கைது செய்துள்ளோம். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தில் தலா 40 வழக்குகளுக்கு மேல் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டத்தில் இதேபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக, 30 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்களை தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில்தான் கைது செய்துள்ளோம். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளோம்" என்று காவல் துணை கண்காணிப்பாளர் கூறினார்.

SCROLL FOR NEXT