வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார் (24). இவர், சேர்க்காடு கூட்டுச்சாலை பகுதியில் அடகு கடை வைத்துள்ளார். வழக்கம்போல் வியாபாரத்துக்காக அனில்குமார் நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் திருடு போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அடகு கடை, ஜூஸ் கடை, ஏ.டி.எம் மையத்துக்கு பின்புறம் உள்ள காலி இடத்தின் வழியாக சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் முதலில் அடகு கடையின் பின்பக்க சுவரை துளையிட்டுள்ளனர். அந்த சுவர் கான்கிரீட்டால் இருந்ததால் துளையிட முடியவில்லை. இதனால், பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையின் சுவரை துளையிட்டவர்கள் கடைக்குள் நுழைந்து அங்கிருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். இரும்பு லாக்கரை உடைத்து அதிலிருந்த சுமார் 400 கிராம் எடையுள்ள அடகு தங்க நகைகளையும், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
கடைக்குள் இருந்த கேமராக்களையும் அதன் காட்சிப் பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதையடுத்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், அதில் எங்காவது மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 2 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.