க்ரைம்

வெளிநாடுகளுக்கு வாட்ஸ்-அப் அழைப்பு வழக்கில் முருகன் விடுதலை

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் சிறையில் வாட்ஸ்-அப் அழைப்பு வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் அருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற கரன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் தண்டனை கைதிகள் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, நளினியுடன் முருகன் பேசும்போது வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் வாட்ஸ்-அப் குரூப் கால் மூலம் பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜே.எம் 1-வது மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகன் தனது தரப்புக்காக அவரே வாதாடினார். இதில், சாட்சியங்கள் மீதான விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அரசு தரப்பில் முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படததால் விடுதலை செய்வதாக மாஜிஸ்திரேட் அருண்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை காவல் துறையினர் பாதுகாப்புடன் மத்திய சிறையில் அடைத்தனர். முருகன் மீது தற்போது வேறு 2 வழக்குகளின் விசாரணை மட்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT