க்ரைம்

தா.பழூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லைப் போட்டு பிளஸ் 1 மாணவர் கொலை

செய்திப்பிரிவு

அரியலூர்: தா.பழூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் மணிகண்டன்(16). இவரது தாய் இறந்துவிட்டதால், தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு, அந்தப் பெண்ணுடன் சென்றுவிட்டார். இதையடுத்து, மணிகண்டன் அரியலூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால், கடந்த 20-ம் தேதி பொற்பதிந்தநல்லூரில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்ற மணிகண்டன், 2 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டன் தூங்கியுள்ளார். வீட்டின் பின்பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் படுத்திருந்த மணிகண்டனின் தாத்தா, பாட்டி ஆகியோர் நேற்று காலை வந்து பார்த்தபோது, மணிகண்டனின் தலையில் யாரோ கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து தா.பழூர் போலீஸார் சென்று, மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து மணிகண்டனுடன் தங்கிப் படித்த நண்பர்கள் மற்றும் தாய்மாமன் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT