திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் தினேஷ் ராஜசேகர்(29). தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லாவண்யா(26). இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில், தினேஷ் ராஜசேகர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தினேஷ் ராஜசேகர், மனைவி லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, லாவண்யா கோபித்துக்கொண்டு குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியே செல்ல முயன்றார். இதைக்கண்ட தினேஷ் ராஜசேகர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லாவண்யா, கணவரிடம் இருந்து கத்தியைப் பறிக்க முயற்சி செய்தபோது, இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், எதிர்பாராத விதமாக தினேஷ் ராஜசேகரின் மார்பில் கத்திக் குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை லாவண்யா மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே தினேஷ் ராஜசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, லாவண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.