மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவரது மனைவி ராசி(27). இவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவம் தொடர்பான எம்.டி மேற்படிப்பை படிக்க ராசி திட்டமிட்டார். அதற்கு ‘நீட்’ தேர்வை எழுத வேண்டியிருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு மருத்துவர் ராசி கடந்த சில மாதங்களாக படித்து வந்துள்ளார்.
நீட் தேர்வு மீது இருந்த அச்சத்தின் காரணமாக, கடந்த சில நாட்களாக, தான் நீட் தேர்வு எழுதப் போவதில்லை என கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் ராசி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் குடும்பத்தினர் அச்சப்படாமல் நீட் தேர்வை எழுது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த ராசி, தனது அறைக்கு படிக்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்குச் சென்று பார்த்த போது, ராசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, ராசி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார், விசாரணையில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், ராசிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேட்டுப்பாளையம் நகராட்சிக் கூட்டம் நேற்று மன்ற அலுவலகத்தில் நடந்தது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த பெண் மருத்துவர் ராசிக்கு நீதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.