கடலூர்: சிதம்பரத்தில் பொதுத் தேர்வு விடைத்தாள் அறை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுத படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிதம்பரம் கல்வி மாவட்ட பகுதிகளுக்கான பள்ளிகளின் 10-ம் வகுப்பு அரசுபொது தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆயுதப்படை காவலரான புவனகிரி வட்டம்சேந்திரக் கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பெரியசாமி(26), கடந்த 6-ம் தேதி முதல்பாதுகாப்புப் பணியில் இருந்து வருகிறார். இவருடன் தீயணைப்புத் துறை வீரர் ராஜ்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பெரியசாமி தனக்கு பாதுகாப்புப் பணிக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைச் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு தூக்கிக் கொண்டிருந்த தீயணைப்புத் துறை வீரர் ராஜ்குமார் மற்றும் பள்ளி காவலாளி ஓடி சென்று பார்த்துள்ளனர். பெரியசாமி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துஉள்ளார்.
தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர காவல்நிலைய போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர் பெரியசாமிக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி சக்திகணேசன் கூறும்போது, “நிச்சயதார்த்தம் ஆன நிலையில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விரிவான விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.