க்ரைம்

ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பேருந்து வழித்தடம் தொடர்பாக மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ‘ரூட் தல’ மோதல் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து பட்டாக் கத்திகள் மற்றும் காலி மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நாள் திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லவன் சாலையில், ராயப்பேட்டையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பாரிமுனை செல்லும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள், பேருந்தின் நடத்துநரிடம் தகராறு செய்ததுடன், தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, ராயப்பேட்டையிலும் மாணவர்கள் மோதிக் கொண்டனர்.

ஒரே தினத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து 3 இடங்களில் மோதிக் கொண்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது இனி மென்மையான அணுகுமுறை இருக்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதன் தொடர்சியாக, மோதலில் ஈடுபட்டதாக 8 மாணவர்களை சென்னை மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பட்டாக் கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட 6 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT