க்ரைம்

நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்து மர்ம கும்பல் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் 3 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கந்தப்பக்கோட்டை கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர், மினி லாரியில் கந்தப்பக்கோட்டைக்குச் சென்று மீன் வியாபாரம் செய்துள்ளார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவர், வாகனத்தை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யுமாறு கூறினார். இதனால் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் கலைவாணனின் இருசக்கர வாகனத்தை ஆதித்யன் சேதப்படுத்தினார். பதிலுக்கு மினி லாரியை சிலர் சேதப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தப்பக்கோட்டை கிராமத்துக்குள் 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை கிராமத் தெருக்களில் நாலாபுறமும் வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டுக்குள் ஓடினர். அப்போது கையில் சிக்கியவர்களை அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் 3 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

மேலும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களை அக்கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இதனால் சிறிதுநேரத்தில் அக்கிராமமே களேபரமானது. பின்னர் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்ததால், அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் தாக்குதலில் காயமடைந்த சுரேஷ் (21), முத்துக்குமார்(24), விக்னேஸ்வரன்(75) உட்பட 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் கிராம மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

6 பேர் கைது; 4 பேருக்கு வலை

இதையடுத்து கந்தப்பக்கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் மீது நிலக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களில் பிரவீன்ராஜா(26), அருண்பாண்டி(26), தீபக்குமார்(23), செந்தில்ராஜன்(31), கனிராஜா(25), பிச்சைமுத்து(18) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஆதித்யன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT