ஈரோடு: ஈரோட்டில் மூதாட்டியின் வீட்டு பூட்டை உடைத்து 6 பவுன் நகை ரூ.35 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோயில் தெரு 9-வது வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் திருடப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூலப்பாளையம் விநாயகர் கோயில் தெரு 3-வது வீதியில் உள்ள ஒரு கட்டிட மேஸ்திரி வீடு, ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
இந்த வழக்குகளில் தொடர்புடை யவர்கள் பிடிபடுவதற்கு முன்பாக, ஈரோடு திண்டலில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
திண்டல் பங்காரு நகரில் லோகநாயகி (60) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற லோகநாயகி, நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆளில்லாத வீடுகளைக் கண்டறிந்து, பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.