கடலூர்: கடலூரில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியார் (கந்தசாமி நாயுடு) மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று( மே.17) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவிகள் சென்றனர். கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்ததும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் கல்லூரி வளாகத்தில் பரவியது. இதனால் மாணவிகளும், பேராசிரியர்களும் திரண்டனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில், அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (19), பி.காம். முதலாமாண்டு படித்து வந்தது, அவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகள் என்பதும், இவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், அந்த மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் ''தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ, யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்சிசி யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு. அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது. இந்தக் கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கல்லூரி மாணவி தனலட்சுமி தற்கொலை செய்துகொண்டாரா, தற்கொலை எனில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.