சென்னை: பழைய துணிகளை சேகரிக்கும் தன்னார்வலர் போல நடித்து திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியா பிரசாத். ஆசிரியரான இவர், கடந்த மாதம் 23-ம் தேதி தனது வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு அருகில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 57 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.25 ஆயிரம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீஸார் விசாரணை நடத்தினர். முன்னதாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு நகை, பணத்தை திருடியதாக செங்குன்றம், முண்டியம்மன் நகரைச் சேர்ந்த கோகிலாவை கைது செய்தனர்.அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்ட கோகிலா, தன்னார்வலர் போல நடித்து வீடுகளுக்குச் சென்று துணி மற்றும் பணம் வசூல் செய்வது போல வீடுகளை நோட்டமிட்டு திறந்திருக்கும் வீடுகளுக்குள் சென்று திருடி வருவது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று திருடிய நகைககளில் சிலவற்றை தனக்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுநர் சரவணனிடம் கொடுத்துள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோகிலா சிறையிலடைக்கப்பட்டார்.