பெங்களூரு: பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான குற்றவாளியை போலீஸார் நள்ளிரவில் சுட்டு பிடித்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சுங்கடகட்டியைச் சேர்ந்தவர் நாகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றும் 24 வயதான இளம் பெண்ணை நாகேஷ் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. தனது காதல் குறித்து பல முறை அந்தப் பெண்ணிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி அந்தப் பெண் அலுவலகத்துக்கு சென்றபோது வழிமறித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் மீது நாகேஷ் ஆசிட் வீசினார். இதனால் பலத்த காயமடைந்த பெண் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காமாக்ஷி பாளையா போலீஸார், 4 தனிப்படைகள் அமைத்து நாகேஷை தேடி வந்தனர். தலைமறைவான அவரை கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தேடிவந்தனர். நாகேஷின் புகைப்படத்தை பெங்களூரு, தர்மபுரி, திருவண்ணாமலை உட்பட பல்வேறு இடங்களில் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர்.
இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் நாகேஷ் அங்குள்ள கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தகவல் கொடுத்தார். இதையடுத்து மாற்று உடையில் அங்கு சென்ற போலீஸார் காவி உடையணிந்திருந்த நாகேஷை கைது செய்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு கெங்கேரி அருகே வந்தபோது நாகேஷ் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த நாகேஷ் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.